தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் 15 முதல் 19-ஆம் தேதி வரை நான்கு மாவட்டங்களில் நடைபெற்ற ஏழு ஜல்லிக்கட்டு போட்டிகளில் நேரில் கண்ட சாட்சிகளின் விசாரணைகள் ஜல்லிக்கட்டில் காளைகள் உடலளவிலும், மனதளவிலும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டது குறித்த பல்வேறு ஆதாரங்களை ஆவணப்படுத்தின. காளைகள் மத்தியில் இயல்பிலேயே காணப்படும் “சண்டையிடு அல்லது தப்பித்துச்செல்” என்ற பதற்றமான மனநிலையை, வன்முறையை திணித்தும், அவற்றை துன்புறுத்தியும் தூண்டுகின்றனர். மேலும் இந்நிகழ்வுகளில் காளைகள் மற்றும் மனிதர்களின் உயிர் பணயம் வைக்கப்படுகிறது. இச்செயல்கள் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டின் மீதான உச்சநீதிமன்றம் விதித்த தடையின் உள்ளார்ந்த ஞானத்தையும், நிரந்தரத் தடைக்கான அவசியத்தையும் நிரூபிக்கிறது.
அரியலூர், திண்டுக்கல், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு நிகழ்வுகளில் காளைகள் அடிக்கப்பட்டு, உதைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, உலோக அரிவாள் மற்றும் ஆணி பொறுத்தப்பட்ட குச்சிகளால் குத்தப்பட்டு, அவற்றின் மீது பலர் ஒரே நேரத்தில் தாவிக்குதித்து அடக்க முற்பட்டு காயப்படுத்தும் கொடூரமான காட்சிகள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில் பதிவாகியுள்ளது. சோர்வு மற்றும் நீரிழப்பால் சரிந்து விழும் காளைகள், நிழலான இருப்பிடம், ஓய்வு, தண்ணீர் மற்றும் உணவு வழங்கப்படாமல் போட்டியில் பங்கேற்பதற்காக கட்டாயப்படுத்தப்பட்டு பல மணிநேரம் காத்திருக்க வைக்கப்படுகின்றன.
காளைகளை பாதுகாக்க மாநில சட்டம் தவறிவிட்டது
பொழுதுபோக்கிற்காக காளைகளைத் துன்புறுத்துவது காட்டுமிராண்டித்தனமானது. அமைப்பாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் காளைகளின் வால்களை வெறித்தனமாக கடிக்கவும், முறுக்கவும் செய்தனர், மூக்கணாங்கயிற்றைக் கொண்டு காளைகளை முரட்டுத்தனமாக இழுத்து பின்னங்கால்களில் நிற்கச்செய்தனர். காளைகள் பல நேரங்களில் மிரளுவதால் கயிறுகள் அறுபட்டு வலியால் துடிப்பதோடு, அவற்றின் மூக்கில் ரத்தம் வடிகிறது. பல விலங்குகள் சோர்வு மற்றும் நீரிழப்பினால் சரிந்து விழுந்து பலத்த காயம் அடைந்தன.
COVID-19 நோய்த்தொற்றின் காரணமாக இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு நடைபெறும் காலம் குறுகிவிட்டாலும், இந்த ஆண்டு நடத்தப்பட்ட போட்டிகளால் கடுமையான மனித மற்றும் விலங்குகளின் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. பீதியடைந்த காளைகள் கிராம வீதிகளில் தப்பி ஓடுவதையும், பார்வையாளர்களைக் காயப்படுத்துவதையும், சிலரைக் கொல்வதையும் விசாரணைகளின்போது காணமுடிந்தது. ஜல்லிக்கட்டின்போது நிகழும் அனைத்து அசம்பாவிதங்கள் குறித்தும் ஊடகங்கள் செய்தி வெளியிடுவதில்லை. இருப்பினும் 2020-ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும், ஜல்லிக்கட்டு நிகழ்வுகளின் போது குறைந்தது 13 மனிதர்களும் ஆறு காளைகளும் இறந்ததாகவும், 570 மனிதர்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை மீண்டும் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பதையே இந்த புதிய விசாரணைகள் நிரூபிக்கின்றன.
காணொளிகள்
தமிழ்நாட்டிலுள்ள காளைகளுக்கு உண்மையான பாதுகாப்பு தேவை
ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைகள் நகைப்புக்குரியது. தமிழ்நாடு விலங்கு வதை தடுப்பு (ஜல்லிக்கட்டு நடத்தை) விதிகள், 2017-இல் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை மீறுவோருக்கு, மாநிலத்தில் சட்டம் இயற்றுபவர்கள் கடுமையான தண்டனைகள் அல்லது அபராதங்களை விதிக்க வழிவகை செய்யாததால், போட்டி அமைப்பாளர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் தொடர்ந்து காளைகளை துன்புறுத்துவதும், மனிதர்களின் உயிரைப் பணயம் வைப்பதும் மேலும் எளிதாகிவிட்டது
வெறிகொண்ட நிலையில் காணப்பட்ட பார்வையாளர்கள் பலரும் சேகரிப்பு முற்றத்தில் நுழைந்து, அங்கு வரும் காளைகளைப் பயன்படுத்தி, விதிமுறைகளுக்கு எதிராக அவற்றின் கொம்புகளை பிடித்து சட்டவிரோதமான ’இணை ஜல்லிக்கட்டில்’ ஈடுபட்டதை நமது சாட்சிகள் படம்பிடித்துள்ளனர். பங்கேற்க நிர்பந்திக்கப்பட்ட காளைகளில் பலவும் கால்நடை மருத்துவர்களால் பரிசோதிக்கப்படவில்லை. மேலும் பரிசோதனை முகாம்களில் மருத்துவ அதிகாரிகள் காளைகளுக்கு கட்டாய உடல் மருத்துவ பரிசோதனைகளை நடத்தாமல் அவை ஜல்லிக்கட்டுக்கு உகந்தவை என்று அறிவித்த காட்சிகளும் காணொளிகளில் பதிவாகியுள்ளது.
ஜல்லிக்கட்டு நமது சமூகத்திற்கும் ஓர் இழுக்கு. பல ஆண்டுகளாக இந்திய விலங்குகள் நல வாரியம்(AWBI) மற்றும் PETA இந்தியா மேற்கொண்ட விசாரணைகளின் வாயிலாக விலங்கு வதை தடுப்பு சட்டம், 1960-ன், பிரிவு 3 மற்றும் 11 ஆகியவை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது உறுதியாகிறது. இதன் காரணமாகவே கடந்த மே 2014-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது
விலங்கு வதை தடுப்பு(தமிழ்நாடு திருத்தம்) சட்டம், 2017; தமிழ்நாடு விலங்கு வதை தடுப்பு(ஜல்லிக்கட்டு நடத்தை) விதிகள், 2017; மற்றும் AWBI-இன் 2018 வழிகாட்டுதல்கள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது இந்த சமீபத்திய விசாரணையின் வாயிலாக வெட்ட வெளிச்சமாகிறது.இப்பொழுதே பாருங்கள், நீங்களே தெரிந்துக்கொள்வீர்கள்:
புகைப்பட தொகுப்பு
இயல்பிலேயே பதட்டமான விலங்கான காளைகளை வேண்டுமென்றே துன்புறுத்துவது மனிதாபிமானமற்ற செயல் ஆகும். ஜல்லிக்கட்டு நிகழ்வுகளின் போது, பங்கேற்பாளர்கள் குச்சிகள் மற்றும் அரிவாள்களால் காளைகளைக் குத்துகிறார்கள், மேலும் அவற்றை அடித்து, வால்களைக் கடித்து, அவற்றின் மீது தாவிக் குதித்து, கூட்டாக சமாளிக்க முற்பட்டு கடுமையாக துன்புறுத்துகிறார்கள். இதனால் அவற்றுக்கு எலும்பு முறிவுகள் ஏற்படுவதோடு, பலத்த காயமடைகின்றன. பல காளைகள் சோர்வு மற்றும் நீரிழப்பால் சரிகின்றன, பல காளைகள் இறக்கின்றன.
காளைகளை காட்சிப்பொருளாக்கி உயிர்பிழைக்க தப்பியோட பயமுறுத்தியும், போட்டிகளில் பங்கேற்க கட்டாயப்படுத்தியும் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு மற்றும் இதுபோன்ற பிற பந்தயங்கள் இயல்பாகவே கொடூரமானது என்பதை உச்சநீதிமன்றம் அங்கீகரிக்கிறது, இதன் காரணமாகவே 2014-ஆம் ஆண்டில் காளைகளை இத்தகைய நிகழ்ச்சிகளில் பயன்படுத்த தடை செய்தது.
இதை நம்பவில்லையா? கீழே உள்ள புகைப்படங்களைப் பாருங்கள்:
காயங்கள் மற்றும் இறப்புகள்
ஜல்லிக்கட்டு நிகழ்வுகளால் காளைகள் மற்றும் மனிதர்கள் காயம் அடைவதும், எலும்பு முறிவுகள் ஏற்படுவதும், இறப்பதும் தொடர்கதையாகி வருகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக அரசு ஜல்லிக்கட்டை சட்டப்பூர்வமாக்கியது. இதன் பின்னர் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு நிகழ்வுகளில் குறைந்தது 22 காளைகள் மற்றும் 57 மனிதர்கள் இறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது, மேலும் 32 காளைகள் மற்றும் 3,632 மனிதர்களுக்கு மேல் காயமடைந்ததாக தெரிகிறது. ஜல்லிக்கட்டு மீதான உச்சநீதிமன்றத்தின் தடை நிரந்தரமாக்கப்பட வேண்டிய நேரம் இது
இத்தகைய நிகழ்வுகளால் பாதிக்கப்படுவோரின் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். நிகழ்வுகளின்போது ஏற்பட்ட காயங்களால் பின் நாட்களில் ஏற்படும் மனித இறப்புகள் குறித்தும், காளைகளுக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள் குறித்த முழுமையான தகவல்களையும் செய்தி ஊடகங்கள் வெளியிடுவதில்லை.
ஜல்லிக்கட்டு முடிவுக்கு வர வேண்டும்
காளைகள் வேண்டுமென்றே துன்புறுத்தப்படும் அடிப்படைக் கொடுமைகளை தமிழக மாநில சட்டம் மறுக்க முடியாது. ஜல்லிக்கட்டின்போது தள்ளப்பட்டு, அடிக்கப்பட்டு, குத்தப்பட்டு, துன்புறுத்தப்படும் காளைகள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் வேதனையடைகின்றன. இத்தகைய கொடுமைகளில் இருந்து காளைகளை பாதுகாக்கவும், காளைகள் மற்றும் மனிதர்கள் காயமடைவதையும், இறப்பதையும் தடுக்கவும், ஜல்லிக்கட்டுக்கு கடந்த காலத்தில் விதிக்கப்பட்ட தடையை மீண்டும் உறுதிசெய்ய வேண்டும்.